பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
பங்கு சந்தையில் முதலீடு செய்வதால் கிடைக்கும் மிக முக்கியமான வருமானம் ஈவுத்தொகை. பங்குகளை வாங்குவதன் மூலம் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக மாறுகிறோம். தனது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கிறது.
எவ்வாறு செயல்படுகிறது, நன்மைகள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை குறித்து காண்போம்.
டிவிடண்ட் வரலாற்றின் தொடக்கம்
உலகிலேயே முதன்முதலில் ஈவுத்தொகை வழங்கிய பெருமை டச்சு கிழக்கு இந்திய கம்பெனியை (Dutch East India Company - VOC) சாரும்.
ஆண்டு: 1602 முதல் 1698 வரை இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் குறிப்பிட்ட பகுதியை முதலீட்டாளர்களுக்கு வழங்கியது.
சிறப்பம்சம்: தொடக்க காலத்தில் பணமாக மட்டுமின்றி, மசாலா பொருட்களும் நிறுவனத்தின் லாபத்தில் (மிளகு போன்றவை) பகிர்ந்தளிக்கப்பட்டன. சராசரியாக 18% லாபத்தை தனது வாழ்நாள் முழுவதும் இது வழங்கியது.
1. டிவிடெண்ட் என்றால் என்ன?
எளிமையாக சொன்னால், ஒரு நிறுவனம் தான் ஈட்டிய நிகர லாபத்தில் (Net Profit), தனது பங்குதாரர்களுக்கு பணமாகவோ அல்லது கூடுதல் பங்குகளாகவோ வழங்குவது. அனைத்து நிறுவனங்களும் இதை வழங்குவதில்லை. பொதுவாக, நிலையான மற்றும் முதிர்ச்சியடைந்த நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து இதை வழங்குகின்றன.
2. டிவிடண்ட் ஏன் வழங்கப்படுகிறது?
நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியில் பங்குதாரர்களை இணைத்துக்கொள்ளவே இதை வழங்குகின்றன.
- நிதி நிலைத்தன்மைக்கான சான்று: தொடர்ந்து ஈவுத்தொகை வழங்குவது, நிறுவனம் நிலையான, நம்பகமான இலாபங்களை ஈட்டுகிறது என்பதையும், அதிக நிறுவன பணப்புழக்கத்தை கொண்டுள்ளது என்பதையும் சந்தைக்கு உணர்த்துகிறது.
- பழைய மற்றும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கிறது: பல ஆண்டுகளாக பங்குகளை வைத்திருக்கும் நீண்ட கால முதலீட்டாளர்கள் (நிறுவன நிதிகள், ஓய்வு பெற்றவர்கள் போன்றோர்) மற்றும் புதிய முதலீட்டாளர்களையும் ஈர்க்கிறது, இது பங்கு விலையை மிகவும் நிலையானதாகவும், குறைந்த ஏற்ற இறக்கத்துடனும் வைத்திருக்க வழிவகுக்கிறது.
- ஒழுங்குபடுத்தப்பட்ட மூலதன ஒதுக்கீடு: உபரி பணத்தை பங்குதாரர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நிர்வாகிகளை அபாயகரமான, சரியாக ஆராயப்படாத கையகப்படுத்துதல்கள் அல்லது வீணான விரிவாக்க திட்டங்களை மேற்கொள்வதை தடுக்கிறது.
3. டிவிடெண்ட் எவ்வாறு வழங்கப்படுகிறது?
- அறிவிப்பு (Declaration Date): நிறுவனத்தின் இயக்குநர்குழு ஈவுத்தொகையை அறிவிக்கும் நாள்.
- எக்ஸ்-டிவிடெண்ட் தேதி (Ex-Dividend Date): இது மிக முக்கியமான நாள். இந்த தேதிக்கு முன்பாக பங்குகளை வாங்கியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
- பதிவு தேதி (Record Date): இந்த தேதியில் யார் பங்குதாரர் பதிவேட்டில் இருக்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படும்.
- பணம் செலுத்தும் தேதி (Payment Date): தொகை நேரடியாக முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
4. டிவிடெண்டின் வகைகள்
- ஈவுத்தொகை (Cash Dividend): இதுவே மிகவும் பொதுவான வகை. நிறுவனம் லாபத்தை நேரடியாக பங்குதாரர்களின் வங்கி கணக்கில் பணமாக செலுத்துவது.
- பங்கு டிவிடெண்ட் (Stock Dividend / Bonus): பணத்திற்கு பதிலாக, நிறுவனமானது பங்குதாரர்களுக்கு கூடுதல் பங்குகளை இலவசமாக வழங்குவது.
- சொத்து டிவிடெண்ட் (Property Dividend): நிறுவனம் தனது சொத்துக்கள் அல்லது தயாரிப்புகளை பங்குதாரர்களுக்கு வழங்கலாம் (இது மிகவும் அரிது).
காலத்தின் அடிப்படையில்
- இடைக்கால டிவிடண்ட் (Interim Dividend): நிதியாண்டின் இடையில் (உதாரணமாக காலாண்டு முடிவுகளில்) வழங்கப்படுவது.
- இறுதி டிவிடண்ட் (Final Dividend ): நிதியாண்டு முடிந்த பிறகு, வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் (AGM) ஒப்புதல் பெற்று வழங்கப்படுவது.
- சிறப்பு டிவிடெண்ட் (Special Dividend): ஒரு நிறுவனம் வழக்கமான கால இடைவெளியை தாண்டி, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மிகப்பெரிய லாபம் ஈட்டினால், கூடுதல் தொகையை வழங்கும்.
5. முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் ஏன் முக்கியம்?
- நிலையான வருமானம்: பங்கு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு ஒரு நிலையான வருமானம் கிடைக்கிறது. இது ஓய்வு பெற்றவர்களுக்கும், குறுகிய கால வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளது.
- நிறுவனத்தின் நம்பகத்தன்மை: தொடர்ச்சியாக ஈவுத்தொகை வழங்கும் நிறுவனங்கள் நிதி ரீதியாக வலுவாகவும், லாபகரமாகவும் இருப்பதை இது காட்டுகிறது.
- கூட்டு வட்டி பலன் (Compounding): மீண்டும் அதே நிறுவனத்தின் பங்குகளை வாங்க பயன்படுத்தினால், நீண்ட காலத்தில் பெரிய அளவிலான செல்வத்தை உருவாக்க முடியும். இது 'ஸ்னோபால் எஃபெக்ட்' (Snowball Effect) என்று அழைக்கப்படுகிறது.
6. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறியீடுகள்
- டிவிடெண்ட் ஈல்ட் (Dividend Yield): இது ஒரு பங்கின் விலையில் எத்தனை சதவீதம் டிவிடெண்டாக வழங்கப்படுகிறது என்பதை குறிக்கும்.
- ஈவுத்தொகை செலுத்தும் விகிதம் (Dividend Payout Ratio): நிறுவனம் தனது மொத்த லாபத்தில் எவ்வளவு சதவீதத்தை வழங்குகிறது என்பதை காட்டுகிறது. அதிகப்படியான பேஅவுட் விகிதம் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம்.
7. டிவிடெண்ட் முதலீட்டில் உள்ள சவால்கள்
- வரி விதிப்பு: இந்த வருமானம் தனிநபர் வருமான வரியின் கீழ் வரலாம். இதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- வருமான குறைப்பு: பொருளாதார சூழல் மோசமடையும் போது அல்லது நிறுவனம் நட்டத்தில் இயங்கும் போது தொகை குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம்.
- வளர்ச்சி மற்றும் லாபம்: வேகமாக வளரும் நிறுவனங்கள் லாபத்தை மீண்டும் தொழிலில் முதலீடு செய்யும். எனவே, ஈவுத்தொகை தராத நிறுவனங்கள் வளர்ச்சி நிறுவனங்களாக (Growth Stocks) இருக்கலாம்.
ஈவுத்தொகை முதலீடு என்பது பங்கு சந்தை முதலீட்டின் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான வழிமுறையாகும். இது முதலீட்டாளர்களுக்கு பணப்புழக்கத்தை வழங்குவதுடன், பங்கு விலையின் மாற்றத்தையும் தாண்டி ஒரு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது. இருப்பினும், இதை மட்டுமே பார்த்து பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் அடிப்படை தரம் (Fundamentals) மற்றும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்வதே சிறந்தது.
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக