சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
கடந்த பத்தாண்டுகளில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான, அதிரடியான மாற்றம் என்னவென்றால் அது கிரிப்டோகரன்சிகளின் (Cryptocurrencies) வரவுதான். 2009-ஆம் ஆண்டில் பிட்காயின் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இது ஏதோ சில கணினி ஆர்வலர்களின் தற்காலிக பொழுதுபோக்கு என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் இன்று, அது உலகளாவிய நிதித்துறையையே மாற்றி அமைக்கும் பிரம்மாண்ட சக்தியாக உருவெடுத்துள்ளது.
வங்கி போன்ற எந்த ஒரு மத்திய அமைப்பின் (Central Authority) கட்டுப்பாடும் இல்லாமல், பிளாக்செயின் (Blockchain) எனப்படும் பரவலாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் (Decentralized Technology) மூலம் இயங்கும் இந்த கிரிப்டோ நாணயங்கள், முதலீட்டாளர்களின் சொத்து குவியலாகவும், தொழில்நுட்ப உலகின் எதிர்காலமாகவும் பார்க்கப்படுகின்றன.
இன்று சந்தையில் ஆயிரக்கணக்கான கிரிப்டோ நாணயங்கள் இருந்தாலும், அவற்றின் சந்தை மதிப்பு (Market Capitalization), தொழில்நுட்ப நம்பகத்தன்மை மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள கிரிப்டோகரன்சிகளை காண்போம்.
எண்ம நாணயம் (Cryptocurrency) மற்றும் சந்தை மதிப்பு (Market Cap) என்றால் என்ன?
நாணயங்களை பற்றி பார்ப்பதற்கு முன், இந்த துறையின் அடிப்படைகளை புரிந்துகொள்வது அவசியம்.
எண்ம நணயம் (Cryptocurrency): குறியாக்கவியல் (Cryptography) எனப்படும் தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு எண்முறை (Digital) அல்லது மெய்நிகர் (Virtual) நாணயமாகும். இதை மாற்றியமைப்பது மிக கடினமானது.
பிளாக்செயின் (Blockchain): இது ஒரு பொதுவான எண்முறை (Digital) பதிவேடு (Ledger). இதில் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளும் வலையமைப்பில் (Network) உள்ள ஆயிரக்கணக்கான கணினிகளில் ஒரே நேரத்தில் பதிவாவதால், இதில் எவ்வித மோசடியும் செய்ய முடியாது.
சந்தை மதிப்பு (Market Capitalization): குறிப்பிட்ட கிரிப்டோகரன்சியின் மொத்த நாணயங்களின் எண்ணிக்கையை, அதன் தற்போதைய விலையால் பெருக்கினால் கிடைப்பது அதன் சந்தை மதிப்பு. இது இதன் வலிமையை தீர்மானிக்கிறது.
எண்ம நாணயத்தின் சந்தை மதிப்பு | = | நாணயத்தின் தற்போதைய விலை | × | மொத்த நாணயங்களின் எண்ணிக்கை |
இந்த அளவுகோல்களின்படி, உலகின் முதல் 5 கிரிப்டோகரன்சிகள்:
| தரவரிசை | கிரிப்டோகரன்சி | குறியீடு | முக்கிய நோக்கம் / பயன்பாடு |
| 1 | பிட்காயின் | BTC | எண்முறை (Digital) தங்கம், மதிப்பு கூடும் சேமிப்பு (Store of Value). |
| 2 | எத்ரீயம் | ETH | SMART ஒப்பந்தங்கள், பரவலாக்கப்பட்ட செயலிகள் (dApps) |
| 3 | டெதர் | USDT | நிலையான நாணயம் (அமெரிக்க டாலருக்கு நிகரானது), வர்த்தக பாதுகாப்பு |
| 4 | பைனான்ஸ் காயின் | BNB | பரிமாற்றல் (Exchange) பயன்பாடு, பிளாக்செயின் கட்டணம் |
| 5 | சோலனா / ரிப்பிள் | SOL / XRP | அதிவேக பரிவர்த்தனை, உலகளாவிய பண பரிமாற்றம் |
குறிப்பு: கிரிப்டோகரன்சிகளின் ஏற்ற இறக்கங்களால் சந்தை மதிப்பில் 4 மற்றும் 5-வது இடங்கள் அவ்வப்போது மாறக்கூடும், எனினும் சோலானா மற்றும் ரிப்பிள் ஆகியவை தங்களின் வலுவான தொழில்நுட்பத்தால் முதல் 5 இடங்களை தக்கவைத்து வருகின்றன.
1. பிட்காயின் (Bitcoin - BTC)
உலகின் முதல் மற்றும் மிக மதிப்புமிக்க எண்ம நாணயமகும்.
தோற்றமும் வரலாறும்
2008-ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் போது, பாரம்பரிய வங்கி முறையின் தோல்விகளுக்கு பதிலாக "சடோசி நகமோட்டோ" (Satoshi Nakamoto) என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு நபரால் (அல்லது குழுவால்) பிட்காயின் உருவாக்கப்பட்டது. இதற்கான வெள்ளை அறிக்கை (Whitepaper) 2008-ல் வெளியிடப்பட்டு, 2009 சனவரியில் இதன் வலையமைப்பு (Network) செயல்பாட்டுக்கு வந்தது.
தொழில்நுட்பம் மற்றும் இயங்கும் விதம்
பிட்காயின் Proof of Work (PoW) என்ற ஒருமித்த கருத்தாக்க பொறிமுறையின் (Consensus Mechanism) கீழ் இயங்குகிறது.
மைனிங் (Mining): பிட்காயின் பரிவர்த்தனைகளை சரிபார்க்கவும், புதிய பிட்காயின்களை உருவாக்கவும் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிக்கலான கணக்கு புதிர்களை தீர்க்கும் இந்த செயல்முறைக்கு 'மைனிங்' என்று பெயர்.
வரம்புக்குட்பட்ட சப்ளை (Limited Supply): உலகிலேயே மொத்தம் 21 மில்லியன் (2.1 கோடி) பிட்காயின்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்ற கடுமையான விதி இதன் குறியீட்டிலேயே எழுதப்பட்டுள்ளது. இதில் 19 மில்லியனுக்கும் அதிகமான நாணயங்கள் ஏற்கனவே மைன் செய்யப்பட்டுவிட்டன.
Halving: ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மைனர்களுக்கு வழங்கப்படும் பிட்காயின் வெகுமதி பாதியாக குறைக்கப்படும். இது பிட்காயினின் பற்றாக்குறையை அதிகரித்து, அதன் மதிப்பை உயர்த்துகிறது.
பிட்காயினின் நன்மைகளும் சவால்களும்
நன்மைகள்: மிக உயர்ந்த பாதுகாப்பு, உலகளாவிய அங்கீகாரம், நிறுவன முதலீட்டாளர்களின் (Institutional Investors) ஆதரவு.
குறைபாடுகள்: பரிவர்த்தனை வேகம் குறைவு. ஒரு வினாடிக்கு 7 பரிவர்த்தனைகள் மட்டுமே (7 Transaction Per Second -TPS), மைனிங் செய்வதற்கு அதிக மின்சாரம் தேவைப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்.
2. எத்ரீயம் (Ethereum - ETH)
பிட்காயினுக்கு அடுத்தபடியாக, கிரிப்டோ சந்தையில் இரண்டாவது பெரிய நாணயமாக திகழ்வது எத்ரீயம் ஆகும். ஆனால், இது வெறும் நாணயம் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு பிரம்மாண்ட மென்பொருள் தளமாகும்.
தோற்றமும் நோக்கமும்
2015-ஆம் ஆண்டு விட்டாலிக் புட்டெரின் (Vitalik Buterin) என்ற இளம் புரோகிராமரால் எத்ரீயம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிட்காயின் என்பது வெறும் பண பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்பட்ட நிலையில், எத்ரீயம் அதன் பிளாக்செயினில் மென்பொருட்களை இயக்கும் வசதியை கொண்டு வந்தது.
SMART ஒப்பந்தங்கள் (Smart Contracts)
எத்ரீயத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு "SMART ஒப்பந்தங்கள்" ஆகும். இவை மனிதர்களின் தலையீடு இல்லாமல், சில நிபந்தனைகள் பூர்த்தியாகும்போது தானாகவே இயங்கும் கணினி குறியீடுகளாகும் (Self-executing codes).
உதாரணம் : ஒரு விடுதி அறை (Hotel Room) வாடகைக்கு எடுக்கும்போது, வாடகை பணம் செலுத்தப்பட்டவுடன் எண்முறை (Digital) சாவி வாடகைதாரருக்கு தானாகவே சென்று சேரும்படி SMART ஒப்பந்தம் எழுதலாம். இடையில் வரவேற்பாளர் (Receptionist) தேவையில்லை.
எத்ரீயம் சுற்றுச்சூழல் (Ecosystem)
இன்று உலக புகழ்பெற்ற பல கிரிப்டோ தொழில்நுட்பங்கள் எத்ரீயத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளன:
DeFi (Decentralized Finance): வங்கிகள் இல்லாமல் சொத்தின் மீது கடன் வழங்குதல், பெறுதல் மற்றும் வருவாய் ஈட்டுதலை தானியிக்கமாக்குதல்.
NFTs (Non-Fungible Tokens): Digital கலைப்பொருட்கள், இசை மற்றும் சொத்துக்களின் உரிமையை பிளாக்செயினில் பதிவு செய்தல்.
dApps (Decentralized Applications): எந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாடும் இல்லாத செயலிகள் (Apps).
எத்ரீயம் 2.0 (The Merge)
முன்பு பிட்காயின் போல அதிக மின்சாரம் தேவைப்படும் முறையில் இயங்கிய எத்ரீயம், 2022-ல் Proof of Stake (PoS) என்ற புதிய முறைக்கு மாறியது. இதன் மூலம் எத்ரீயத்தின் மின்சார பயன்பாடு 99.9% குறைந்ததுடன், அதன் வேகமும் அதிகரித்துள்ளது.
Proof of Work (PoW) - ஆண்டுக்கான மின்சாரத்தின் அளவு (Energy Consumption/Year) = 70 to 80 TWh
Proof of Stake (PoS) - ஆண்டுக்கான மின்சாரத்தின் அளவு Energy Consumption/Year = 0.01 TWh
3. டெதர் (Tether - USDT)
பிட்காயின் மற்றும் எத்ரீயம் விலைகள் தினசரி மிக கடுமையாக ஏற்ற இறக்கங்களை (Volatility) கொண்டவை. இந்த விலை மாற்றத்தில் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டதே நிலையான நாணயம் (Stablecoin) ஆகும். இதில் முதன்மையானது டெதர் (USDT).
நிலையான நாணயம் (Stable Coin) என்றால் என்ன?
பாரம்பரிய சொத்து (அமெரிக்க டாலர் அல்லது தங்கம்) மதிப்புடன் இணைக்கப்பட்டிருப்பது நிலையான நாணயம் ஆகும்.
நிலையான நாணயம் | ⇒ | 1 டெதர் (USDT) | = | 1 அமெரிக்க டாலர் (USD) |
டெதர் நிறுவனத்திடம் இருக்கும் ஒவ்வொரு 1 USDT நாணயத்திற்கு நிகராக, அவர்களின் வங்கி சேமிப்பில் 1 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு இணையான கடன் பத்திரங்கள் (Bonds) பத்திரமாக இருக்கும்.
USDT-ன் முக்கியத்துவம்
கிரிப்டோ சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் (Traders) லாபத்தை எடுக்கும்போது அல்லது சந்தை வீழ்ச்சியடையும் போது, தங்களின் முதலீட்டை பாதுகாக்க உடனடியாக பிட்காயினை USDT ஆக மாற்றி வைத்து கொள்வார்கள்.
பயன்பாடு: உலகெங்கிலும் உள்ள கிரிப்டோ பரிமாற்றல் (Exchange) அதிக அளவில் பரிவர்த்தனை (Transaction) செய்யப்படும் நாணயம் இதுவே. சர்வதேச பண பரிமாற்றத்தை மிக குறைந்த கட்டணத்தில் சில நொடிகளில் செய்ய உதவுகிறது.
விமர்சனம்: டெதர் நிறுவனம் தங்களின் டாலர் இருப்பை (Reserves) முழுமையாக வெளிப்படையாக காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுவதுண்டு. இருந்தாலும், சந்தையில் இதன் ஆதிக்கம் இன்னும் குறையவில்லை.
4. பைனான்ஸ் காயின் (Binance Coin - BNB)
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான (Crypto Exchange) பைனான்ஸ் (Binance) நிறுவனத்தால் 2017-ல் BNB காயின் உருவாக்கப்பட்டது.
பயன்பாட்டு நாணயம் (Utility Token)
துவக்கத்தில் வர்த்தகம் செய்யும்போது கட்டண சலுகை (Trading Fee Discounts) பெறுவதற்காக மட்டுமே பிஎன்பி (BNB) பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று, இது தனக்கென ஒரு சொந்த பிளாக்செயினை கொண்டு பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.
BNB Smart Chain (BSC)
BNB Smart Chain (BSC) என்ற பிளாக்செயினை உருவாக்கி எத்ரீயத்தை விட மிக குறைந்த கட்டணத்திலும், அதிவேகமாகவும் இயங்கியதால், ஆயிரக்கணக்கான புதிய கிரிப்டோ டோக்கன்களும், dApps-களும் இதன் மீது உருவாக்கப்பட்டன. இதனால் BNB-ன் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
காயின் பர்னிங் (Coin Burning)
BNB-ன் சிறப்பம்சங்களில் ஒன்று "காயின் பர்னிங்" ஆகும். பைனான்ஸ் நிறுவனம் தனது லாபத்தில் ஒரு பகுதியை கொண்டு, சந்தையில் இருக்கும் BNB நாணயங்களை விலைக்கு வாங்கி நிரந்தரமாக அழித்துவிடுகிறது (Burn). இது நாணயத்தின் சப்ளையை குறைத்து, அதன் மதிப்பை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க உதவுகிறது.
5. சோலானா (Solana - SOL) / ரிப்பிள் (Ripple - XRP)
ஐந்தாவது இடத்திற்கு சோலானா மற்றும் ரிப்பிள் ஆகிய இரு நாணயங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இரண்டுமே வெவ்வேறு தனித்துவமான தொழில்நுட்பங்களை கொண்டவை.
சோலானா (Solana - SOL)
சோலனா 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. எத்ரீயம் பிளாக்செயினில் இருக்கும் அதிக கட்டண பிரச்சினைக்கு தீர்வாக இது உருவெடுத்தது.
தொழில்நுட்பம்: இது Proof of History (PoH) என்ற தனித்துவமான தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
வேகம்: வினாடிக்கு 50,000-க்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மிக குறைந்த கட்டணத்தில் (ஒரு பைசாவிற்கும் குறைவாக) செய்து முடிக்க வல்லது.
ரிப்பிள் (Ripple - XRP)
ரிப்பிள் என்பது சர்வதேச பண பரிமாற்றத்தை எளிதாக்க உருவாக்கப்பட்ட ஒரு வலையமைப்பு (Network). இதன் சொந்த நாணயம் XRP.
நோக்கம்: வங்கிகள் சர்வதேச அளவில் பணத்தை மாற்ற SWIFT என்ற முறையை பயன்படுத்துகின்றன, இதற்கு 1 முதல் 5 நாட்கள் ஆகும். ஆனால், ரிப்பிள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் வெறும் 3 முதல் 5 வினாடிகளில் பணத்தை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்பிவிடலாம்.
அங்கீகாரம்: உலகின் பல முன்னணி மத்திய வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ரிப்பிள் வலையமைப்பை (Network) சோதனை செய்து வருகின்றன.
மற்ற நிதித்துறை சார்ந்த தலைப்புகளின் தொடக்க பகுதிகள்.
📊 Stock Marketஅடிப்படை 🪙 Goldமின்னணு முறை 💎 Mutual Fundஇயக்கம் 🛡️ Bondமுக்கிய வகைகள்பாரம்பரிய நாணயங்களுக்கும் கிரிப்டோகரன்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
கிரிப்டோகரண்சிகள் ஏன் இவ்வளவு பிரபலமாகி வருகின்றன என்பதை புரிந்து கொள்ள, வழக்கமாக பயன்படுத்தும் ரூபாய், டாலர் போன்ற ஃபியட் (Fiat) நாணயங்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும்.
| அமைப்பு | ஃபியட் நாணயம் (உதாரணம்: INR, USD) | கிரிப்டோகரண்சி (உதாரணம்: BTC, ETH) |
| கட்டுப்பாடு | மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிகள் | பரவலாக்கப்பட்ட நெட்வொர்க் (அரசாங்களின் கட்டுப்படுகள் மிக குறைவு) |
| வடிவம் | காகித பணம், நாணயங்கள், Digital | முற்றிலும் எண்முறை வடிவம் மட்டுமே |
| சப்ளை அளவு | அரசு நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் அச்சிடலாம் (பணவீக்கம் ஏற்படும்) | அல்காரிதம் படி வரையறுக்கப்பட்டது (எண் கட்டுப்பாடு கொண்டது) |
| பரிவர்த்தனை வேகம் | சர்வதேச நிதி பரிமாற்றத்திற்கு பல நாட்கள் ஆகும் | உலகளவில் சில வினாடிகள் அல்லது நிமிடங்களில் நிதியை பரிமாற்றலாம் |
| விலை நிலைத்தன்மை | ஒப்பீட்டளவில் நிலையானது | மிக கடுமையான விலை ஏற்ற இறக்கங்களை கொண்டது |
கிரிப்டோகரண்சி முதலீட்டில் உள்ள நன்மைகளும் அபாயங்களும்
முதலீடு செய்வதற்கு முன் இதன் இரு பக்கங்களையும் ஆராய வேண்டும்.
நன்மைகள் (Advantages)
அதிகப்படியான லாபம் (High Returns): உலக வரலாற்றிலேயே மிக குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு பன்மடங்கு லாபத்தை கொடுத்த ஒரே சொத்து கிரிப்டோகரன்சிதான். 2010-ல் சில ரூபாயாக இருந்த பிட்காயின் இன்று லட்சங்களில் வர்த்தகமாகிறது.
வெளிப்படைத்தன்மை (Transparency): பிளாக்செயினில் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளும் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்கும் என்பதால், இதில் யாரும் கணக்கு வழக்குகளை மறைக்க முடியாது.
எல்லைகளற்ற பரிமாற்றம் (Borderless): எந்த ஒரு நாட்டின் அனுமதியோ, எல்லையோ இல்லாமல் உலகெங்கிலும் உள்ள எவருக்கும் எளிதாக பணத்தை அனுப்ப முடியும்.
நிதி சுதந்திரம் (Financial Inclusion): வங்கி கணக்கு இல்லாத உலக மக்கள் தொகையில் ஒரு பகுதியினர், வெறும் கைபேசி மற்றும் இணையம் (Internet) இருந்தால் கிரிப்டோ கணக்கை தொடங்கி பயன்படுத்தலாம்.
அபாயங்கள் மற்றும் சவால்கள் (Risks & Challenges)
கடுமையான விலை ஏற்ற இறக்கம் (High Volatility): ஒரே நாளில் ஒரு நாணயத்தின் மதிப்பு 50% உயரவும் வாய்ப்புண்டு, அதே அளவு வீழ்ச்சியடையவும் வாய்ப்புண்டு. மனவலிமை இல்லாத முதலீட்டாளர்களுக்கு இது உகந்தது அல்ல.
அரசுகளின் கட்டுப்பாடுகள் (Regulations): பல நாடுகள் கிரிப்டோ நாணயங்களை எவ்வாறு கையாள்வது என்று இன்னும் தீர்க்கமான முடிவெடுக்கவில்லை. சில நாடுகள் (எ.கா: சீனா) இதற்கு முழு தடை விதித்துள்ளன. இந்தியாவில் இதற்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மோசடிகள் (Scams): கிரிப்டோகரன்சியை சேமித்து வைக்கும் எண்முறை பண பைகளின் (Digital Wallets) தனிநபர் சாவி (Private Key) தொலைந்துவிட்டால், அந்த பணத்தை மீட்கவே முடியாது. மேலும் ஏமாற்று வேலைகளும் (Scams) இதில் அதிகம்.
சுற்றுச்சூழல் தாக்கம் (Environmental Impact): பிட்காயின் போன்ற PoW நாணயங்களை மைனிங் செய்ய பயன்படும் மின்சாரம், சில சிறிய நாடுகளின் மொத்த மின் நுகர்வை விட அதிகமாக உள்ளது.
கிரிப்டோகரன்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
முதலீட்டு தளமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாக பல சேவைகளை உலகிற்கு வழங்குதல்.
Web3 மற்றும் மெட்டாவேர்ஸ் (Metaverse)
இணையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியான Web3 மற்றும் மெய்நிகர் உலகமான மெட்டாவேர்சில் கிரிப்டோகரண்சிகள்தான் முதன்மை நாணயமாக செயல்பட போகின்றன. இங்கு இணையிடம் (Web Domain) வாங்குவது, பொருட்கள் வாங்குவது அனைத்தும் இந்த எண்முறை (Digital) நாணயங்கள் மூலமே சாத்தியமாகும்.
மத்திய வங்கி எண்முறை (Digital) நாணயங்கள் (CBDC)
கிரிப்டோவின் வளர்ச்சியை பார்த்துவிட்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உட்பட உலகின் பல மத்திய வங்கிகள் தங்களின் சொந்த Digital நாணயங்களை (உதாரணமாக: e-Rupee) அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. இது கிரிப்டோவின் பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கு அரசுகள் கொடுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்.
முதல் ஐந்து இடங்களில் உள்ள எண்ம நாணயங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி நோக்கங்களுக்காகவும், வெவ்வேறு தேவைகளை பூர்த்தி செய்யவும் உருவாக்கப்பட்டவை. பிட்காயின் பாதுகாப்பான சேமிப்பாக இருக்கும் வேளையில், எத்ரீயமும் சோலானாவும் உலகை இயக்கும் மென்பொருள் தளங்களாக மாற துடிக்கின்றன. டெதர் வர்த்தகத்திற்கு நிலைத்தன்மையை தருகிறது.
கிரிப்டோகரன்சி என்பது ஒரு மிக சிறந்த தொழில்நுட்ப புரட்சி என்பதில் மாற்று கருத்து இல்லை. எனினும், இதில் இருக்கும் அதிகப்படியான நட்ட அபாயத்தை கருத்தில் கொண்டு, முறையான ஆராய்ச்சிக்கு பிறகே உபரி பணத்தை (Surplus Money) இதில் முதலீடு செய்ய வேண்டும். எதிர்கால Digital பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக கிரிப்டோகரன்சிகள் இருக்கும் என்பது பல மாற்றங்கள் மூலம் வெளிப்படுகிறது.
குறிப்பு: இந்த தகவல் அனைத்தும் வலைப்பக்கம் வெளியிடும் போது இருந்த தரவுகள் ஆகும். கிரிப்டோ சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள காயின்களின் மதிப்பு நொடிக்கு நொடி மாறும்.
கருத்துகள்
கருத்துரையிடுக