பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
உலக நாடுகளின் பொருளாதாரம், வணிக வளர்ச்சி, மற்றும் தனிமனிதர்களின் செல்வ வளம் ஆகியவற்றை தீர்மானிக்கும் ஒரு சக்திவாய்ந்த காரணியாகவும், கணினிமயமாக்கப்பட்டு நொடி பொழுதில் ஆயிரக்கணக்கான பரிவர்த்தனைகள் நடக்கும் பங்கு சந்தை 400 ஆண்டுகளுக்கும் மேலான திருப்பங்கள் நிறைந்த வரலாற்றை கொண்டுள்ளது.
வர்த்தகர்களின் எளிய கூட்டுமுயற்சியாக தொடங்கி, இன்று உலகை ஆளும் நிதி அமைப்பாக எவ்வாறு வளர்ந்தது என்பதை பற்றிய சில வரலாற்று குறிப்புகள்.
1. பங்கு சந்தையின் ஆரம்ப புள்ளிகள் (Early Roots)
முறையான வடிவம் 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. ஆனால், அதற்கான அடித்தளம் அதற்கு முன்பே போடப்பட்டுவிட்டது.
பண்டைய ரோம் மற்றும் இத்தாலி
கிமு (BC) காலத்திலேயே ரோமானிய குடியரசில், அரசு பணிகளை மேற்கொள்வதற்காக பொது மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யும் முறை இருந்தது. அதை 'பப்ளிகானி' (Publicani) என்று அழைத்தனர்.
அதன்பின், 13-ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் சில நகரங்களை (Venice, Florence, Geneva) சேர்ந்த வர்த்தகர்கள், அரசாங்கத்தின் கடன் பத்திரங்களை (Government Bonds) வாங்கி விற்க தொடங்கினர். இதுவே நிதி சந்தையின் (Financial Market) மிக ஆரம்ப கால வடிவமாக கருதப்படுகிறது.
ஆண்ட்வெர்ப் (Antwerp) சந்தை
1500-களில் பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரம் உலக வர்த்தகத்தின் மையமாக இருந்தது. அங்குள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கப்பல் உரிமையாளர்கள் ஒன்று கூடி, வணிக கடன்கள் மற்றும் வர்த்தக பத்திரங்களை பரிமாறிக்கொண்டனர். ஆனால், அங்கு "பங்குகள்" (Stocks) விற்கப்படவில்லை; மாறாக கடன்களும், சரக்குகளுமே கைமாறின.
2. உலகின் முதல் பங்கு சந்தை: டச்சு கிழக்கிந்திய நிறுவனம் (1602)
1602-இல் நெதர்லாந்து நாட்டில் (Amsterdam நகரில்) தொடங்கப்பட்டது.
ஆபத்து நிறைந்த கடல் வணிகம்
16-ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளுடன் (குறிப்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா) நறுமண பொருட்கள் வர்த்தகம் செய்ய கடல் வழி பயணங்களை மேற்கொண்டன. இந்த பயணங்கள் பெரும் லாபத்தை தந்தாலும், அதில் மிகப்பெரிய ஆபத்துகளும் இருந்தன. கடல் கொள்ளையர்கள், கடுமையான புயல்கள் மற்றும் கப்பல் சேதங்கள் காரணமாக சில கப்பல்கள் கரை திரும்பவேயில்லை. ஒரு தனி நபரால் இந்த இழப்பை தாங்க முடியாது என்பதால், புதியதொரு யோசனை பிறந்தது.
டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் (VOC) பிறப்பு
1602-ஆம் ஆண்டு, டச்சு அரசாங்கம் பல சிறிய வர்த்தக நிறுவனங்களை ஒன்றிணைத்து "டச்சு கிழக்கிந்திய நிறுவனம்" (Vereenigde Oostindische Compagnie - VOC) என்ற ஒரு மாபெரும் நிறுவனத்தை உருவாக்கியது.
இந்த நிறுவனம் தனது கப்பல் பயணங்களுக்கான செலவையும், ஆபத்தையும் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தது. கப்பல்கள் லாபத்துடன் திரும்பும்போது அந்த லாபத்தில் ஒரு பகுதி (Dividend - ஈவுத்தொகை) முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் உலகின் முதல் பொது பங்கு வெளியீடு (IPO) நடைபெற்றது. மக்கள் தங்களுக்குள் வாங்குவதற்கும் விற்பதற்கும் வசதியாக உலகின் அதிகாரப்பூர்வமான "ஆம்ஸ்டர்டாம் பங்கு சந்தை" (Amsterdam Stock Exchange) உருவாக்கப்பட்டது.
Stock Market முதலீட்டு குறிக்கோள் மற்றும் SMART முதலீடு.
3. ஆங்கிலேயர்களின் எழுச்சி மற்றும் 'சவுத் சீ' குமிழி (The South Sea Bubble)
டச்சுக்காரர்களின் இந்த வெற்றி ஆங்கிலேயர்களுக்கு பெரும் தூண்டுதலாக அமைந்தது. லண்டனில் வர்த்தகம் வேகமாக வளர தொடங்கியது.
காபி விடுதி (Coffee Houses) கலாச்சாரம்
17-ஆம் நூற்றாண்டின் இறுதியில், லண்டனில் பங்குகளை வர்த்தகம் செய்ய முறையான கட்டிடம் இல்லை. வர்த்தகர்கள், தரகர்கள் (Brokers) அனைவரும் லண்டனின் புகழ்பெற்ற "ஜோனாதன்ஸ் காபி விடுதி" (Jonathan's Coffee House), "காரவேஸ் காபி விடுதி (Garraway's Coffee House)" போன்ற இடங்களில் கூடினர். அங்கு காகிதம் மற்றும் கரும்பலகைகளில் (Paper&Chalkboard) விலைகளை எழுதி வர்த்தகம் செய்தனர். இதுவே பின்னாளில் 1773-இல் லண்டன் பங்கு சந்தையாக (London Stock Exchange - LSE) உருவெடுத்தது.
சவுத் சீ குமிழி (The South Sea Bubble - 1720)
முதன்முதலில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி (Crash). 'சவுத் சீ நிறுவனம்' (South Sea Company) தென் அமெரிக்க நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் ஏகபோக உரிமையை பெற்றது.
இந்த நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை தரும் என்று வதந்திகள் பரப்பப்பட்டதால், மக்கள் கண்மூடித்தனமாக அதன் பங்குகளை வாங்கி குவித்தனர். புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கூட இதில் முதலீடு செய்தார். இந்நிறுவன பங்கின் விலை மிக குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டது.
ஆனால், உண்மையில் அந்த நிறுவனம் எந்தவொரு பெரிய வர்த்தகத்தையும் செய்யவில்லை என்பது தெரிந்தவுடன், 1720-களில் பங்கின் விலை அதலபாதாளத்திற்கு சென்றது. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்தனர். ஐசக் நியூட்டன் இதில் பெரும் தொகையை இழந்து, "என்னால் விண்மீன்களின் இயக்கத்தை கணக்கிட முடிகிறது, ஆனால் மனிதர்களின் பைத்தியக்காரத்தனத்தை கணக்கிட முடியவில்லை" என்று வருத்தத்துடன் கூறினார்.
4. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) பங்கு சந்தையின் தோற்றம்: சுவர்களின் தெரு (Wall Street)
லண்டன் சந்தை சரிவுகளை சந்தித்து கொண்டிருந்தபோது, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
பட்டன்வுட் ஒப்பந்தம் (Buttonwood Agreement - 1792)
நியூயார்க் நகரில் உள்ள 'சுவர் தெருவில்' (Wall Street) வர்த்தகர்கள் கூடி வணிகம் செய்து வந்தனர். மே 17, 1792 அன்று, 24 தரகர்கள் அங்குள்ள ஒரு 'பட்டன்வுட்' (Buttonwood - ஒருவகை மரம்) மரத்தின் அடியில் கூடி ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, அவர்கள் தங்களுக்குள் மட்டுமே வர்த்தகம் செய்வதாகவும், நிலையான தரகு (Commission ) தொகையை பெறுவதாகவும் முடிவு செய்தனர். இந்த எளிய ஒப்பந்தமே நியூயார்க் பங்கு சந்தை (New York Stock Exchange - NYSE) உருவாக காரணமாக அமைந்தது.
19-ஆம் நூற்றாண்டு மற்றும் தொழிற்புரட்சி
1800-களில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, இரயில்வே துறையின் அசுர வளர்ச்சி மற்றும் உள்நாட்டு போர் ஆகிய காரணங்களால் பொருளாதார தேவைகள் அதிகரித்தன. இரயில்வே பாதைகளை அமைக்க பெரும் நிதி தேவைப்பட்டதால், நிறுவனங்கள் பெருமளவில் பங்குகளை வெளியிட்டு நிதியை திரட்டின. 1896-ஆம் ஆண்டு, சந்தையின் போக்கை கணிக்க "டவ் ஜோன்ஸ்" (Dow Jones Industrial Average) குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
5. உலகை உலுக்கிய மாபெரும் பொருளாதார வீழ்ச்சி (The Great Depression - 1929)
1920-களில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பொருளாதாரம் உச்சத்தில் இருந்தது. கார், ரேடியோ, மின்சார சாதனங்களின் உற்பத்தி பெருகியது. பொதுமக்கள் கடன் வாங்கி சந்தையில் முதலீடு செய்ய தொடங்கினர்.
கருப்பு செவ்வாய் (Black Tuesday)
அளவுக்கு அதிகமான ஊக வணிகம் (Speculation), செயற்கையான விலை உயர்வு காரணமாக அக்டோபர் 29, 1929 அன்று ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சந்தை மிக கொடூரமாக சரிந்தது. இந்த நாள் வரலாற்றில் "கருப்பு செவ்வாய்" (Black Tuesday) என்று அழைக்கப்படுகிறது.
ஒரே நாளில் கோடிக்கணக்கான பங்குகள் விற்கப்பட்டன, வாங்குவதற்கு ஆள் இல்லை.
வங்கிகள் திவாலாகின; ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டன.
மக்களின் வேலைவாய்ப்பு பறிபோனது.
இந்த வீழ்ச்சி ஐக்கிய அமெரிக்க நாடுகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகத்தையே "மாபெரும் பொருளாதார வீழ்ச்சி" (Great Depression) என்ற படுகுழிக்குள் தள்ளியது. இதிலிருந்து மீள உலக நாடுகளுக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலானது. இதன் விளைவாகவே, SEC (Securities and Exchange Commission) போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
6. இந்திய பங்கு சந்தையின் வரலாறு (History of Indian Stock Market)
ஆசியாவிலேயே முதன்முதலில் பங்குகளை வர்த்தகம் செய்த இடம் பம்பாய் (தற்பெழுது மும்பை).
ஆலமரத்தடி தொடக்கம் (1850-கள்)
1850-களில் மும்பையின் (அன்றைய பம்பாய்) டவுன் ஹால் பகுதிக்கு அருகில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் நான்கு குஜராத்தி மற்றும் ஒரு பார்சி பங்கு தரகர்கள் ஒன்று கூடி வர்த்தகம் செய்ய தொடங்கினர். வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவர்கள் கூடும் இடமும் மாறி கொண்டே இருந்தது.
1875-ஆம் ஆண்டு, இந்த தரகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து "தி நேடிவ் சேர் அண்ட் ஸ்டாக் புரோக்கர்ஸ் அசோசியேஷன்" (The Native Share & Stock Brokers' Association) என்ற அமைப்பை உருவாக்கினர். இதுவே பின்னாளில் பம்பாய் பங்கு சந்தை (BSE) என்று அழைக்கப்பட்டது. அவர்கள் வர்த்தகம் செய்த இடமானது "தலால் தெரு" (Dalal Street) என்று அழைக்கப்படுகிறது.
அர்சத் மேத்தா ஊழல் மற்றும் முக்கிய ஒழுங்குபடுத்தப்பட்ட வாரியங்கள்
1990-களின் தொடக்கம் வரை BSE மட்டுமே இந்தியாவின் முதன்மை சந்தையாக இருந்தது. அங்கு 'கூக்குரல்' (Outcry) முறை எனப்படும், தரகர்கள் கைகளை அசைத்து, சத்தம்போட்டு பங்குகளை வாங்கி, விற்கும் முறையே இருந்தது.
1992-இல் அர்சத் மேத்தா (Harshad Mehta) வங்கி பத்திர ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஊழல் சந்தையின் அமைப்பில் இருந்த பலவீனங்களை அம்பலப்படுத்தியது.
இதனை தொடர்ந்து, சந்தையை முறைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும்
இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) (SEBI - Securities and Exchange Board of India): 1992-இல் இதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட்டு, சந்தையின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டு அமைப்பாக மாற்றப்பட்டது.
தேசிய பங்கு சந்தை (NSE - National Stock Exchange): 1992-இல் தொடங்கப்பட்டு, 1994-இல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்தியாவில் முதன்முதலில் முழுமையான மின்னணு (Electronic) வர்த்தக முறையை அறிமுகப்படுத்தியது.
7. கணினிமயமாக்கலும் நவீன கால புரட்சியும் (The Digital Era)
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.
NASDAQ - 1971
1971-ஆம் ஆண்டு NASDAQ உலகின் முதல் மின்னணு பங்கு சந்தையை தொடங்கியது. இங்கு தரகர்கள் நேரில் கூடி சத்தமிட தேவையில்லை, கணினி திரைகளின் மூலமே வர்த்தகம் நடைபெற்றது.
காகிதமில்லா பயன்பாடு (DEMAT - Dematerialization)
முன்பெல்லாம் பங்குகள் வாங்கியதற்கான சான்றிதழ்கள் காகித வடிவில் (Physical Share Certificates) வழங்கப்பட்டன. அவை தொலைந்து போகவோ அல்லது சேதமடையவோ அதிக வாய்ப்புகள் இருந்தன. மேலும் இவற்றின் செலவுகளும், காகித பயன்பாடுகளும் அதிகம்.
காகிதமில்லா பயன்பாடு (DEMAT - Dematerialization) இழப்பு, திருட்டு மற்றும் மோசடி போன்ற அபாயங்களை நீக்கி, வர்த்தகம் மற்றும் பரிமாற்றங்களை தடையற்றதாக ஆக்குகிறது.
இணைய வர்த்தகம்
1990-களின் இறுதியில் அறிமுகமான டிமேட் (DEMAT) கணக்குகள் மூலம் காகித பங்குகள் அனைத்தும் எண்முறை (Digital) வடிவமாக மாற்றப்பட்டன. இணையத்தின் (Internet) வருகைக்கு பின், வீட்டில் இருந்தபடியே, கைபேசி செயலிகள் மூலம் பங்குகளை நொடி பொழுதில் வாங்கவும் விற்கவும் வசதி பிறந்தது.
8. 21-ஆம் நூற்றாண்டின் சவால்களும் முக்கிய வீழ்ச்சிகளும்
புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், பொருளாதார சுழற்சி சந்தையில் பல நெருக்கடிகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.
| ஆண்டு | நிகழ்வு | காரணம் / விளைவு |
| 2000 | டாட் காம் குமிழி (.com Bubble) | இணைய நிறுவனங்களின் (Internet Startups) பங்குகள் அளவுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டு, பின்னர் பெருமளவில் சரிந்தன. |
| 2008 | உலக நிதி நெருக்கடி (Global Financial Crisis) | அமெரிக்காவின் வீட்டுவசதி கடன் (Subprime Mortgage) சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் லேமேன் பிரதர்ஸ் போன்ற மாபெரும் வங்கிகள் திவாலாகின. |
| 2020 | கோவிட்-19 சந்தை வீழ்ச்சி (Covid-19 Crash) | கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே முடங்கியதால், மார்ச் 2020-இல் மிக குறுகிய காலத்தில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே மிக வேகமான மீட்சியையும் (V-Shaped Recovery) பதிவு செய்தன. |
9. பங்கு சந்தையின் இன்றைய நிலை (Current Trends)
முதலீட்டு தளம் மட்டுமல்ல, அதிநவீன தொழில்நுட்பங்களின் களமாக மாறியுள்ளது.
அல்காரிதமிக் வர்த்தகம் (Algorithmic Trading): மனிதர்களுக்கு பதிலாக, கணினி நிரல்களும் (Programs) கணித சூத்திரங்களும் அதிவேகமாக வர்த்தகம் செய்கின்றன.
செயற்கை நுண்ணறிவு (AI): சந்தையின் போக்கை முன்கூட்டியே கணிக்கவும், முதலீட்டு ஆலோசனைகளை வழங்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
சமூக ஊடகங்களின் தாக்கம் (Social Media & Retail Revolution): 'ரெடிட்' (Reddit), 'ட்விட்டர்' போன்ற சமூக ஊடகங்கள் மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் (Retail Investors) ஒன்றிணைந்து, பெரும் நிறுவனங்களுக்கு சவால் விடும் 'மீம் ஸ்டாக்' (Meme Stocks - எ.கா: GameStop) புரட்சியும் இன்று அரங்கேறி வருகிறது.
சிறிய மர கப்பலுக்கான நிதியை திரட்டுவதில் தொடங்கிய பயணம், விண்வெளி நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்யும் அளவிற்கு பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.
கடந்த 400 ஆண்டுகால வரலாற்றில் பங்கு சந்தை எத்தனையோ போர்கள், இயற்கை சீற்றங்கள், மாபெரும் பொருளாதார வீழ்ச்சிகள், உலக பெருந்தொற்றுகளை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறை வீழும்போதும், அது முன்பை விட அதிக வலிமையுடன் மீண்டெழுந்துள்ளது என்பதே வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடம்.

கருத்துகள்
கருத்துரையிடுக