மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
இன்றைய நவீன பொருளாதார சூழலில், சேமிப்பு என்பதை தாண்டி முதலீடு என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. பணவீக்கத்தை முறியடித்து, செல்வத்தை பெருக்குவதற்கு சாமானிய மக்கள் முதல் பெரும் செல்வந்தர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு முதலீட்டு திட்டம் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) அல்லது கூட்டு நிதி.
சந்தையை பற்றிய போதிய அறிவோ அல்லது பங்குகளின் விலையை தொடர்ந்து கண்காணிப்பதற்கான நேரமோ இல்லாத முதலீட்டாளர்களுக்கு சிறந்தது.
கட்டமைப்பு, செயல்படும் விதம், வகைகள், நன்மைகள் மற்றும் ஆபத்துகள் ஆகியவற்றை காண்போம்.
1. மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
பல முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் ஒரு கூட்டு நிதி ஆகும்.
ஒரு குறிப்பிட்ட முதலீட்டு நோக்கத்தை கொண்ட ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் இணைகிறார்கள். இவர்களிடமிருந்து திரட்டப்படும் பெரும் தொகையை, நிதி நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிதி மேலாளர் (Fund Manager), முதலீட்டாளர்களின் நோக்கத்திற்கு ஏற்ப பங்குகள் (Stocks), அரசு பத்திரங்கள் (Government Bonds), தங்க பத்திரங்கள் அல்லது பண சந்தை கருவிகளில் (Money Market Instruments) முதலீடு செய்கிறார்.
கிடைக்கும் லாபம் அல்லது நட்டம், முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும் யூனிட்களின் (Allotted Units) விகிதத்தின் அடிப்படையில் பிரித்தளிக்கப்படுகிறது.
2. மியூச்சுவல் ஃபண்டின் கட்டமைப்பு (Structure)
இந்தியாவில் இவை மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இது மூன்று முக்கிய அடுக்குகளை கொண்ட அமைப்பாக செயல்படுகிறது. இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI - Securities and Exchange Board of India) விதித்துள்ள விதிமுறைகளின்படி இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
[ நிறுவனர் (Sponsor) / அறக்கட்டளை (Trust) ]
│
▼
[ சொத்து மேலாண்மை நிறுவனம் (AMC) ]
│
▼
[ நிதி மேலாளர் (Fund Manager) ]
│
▼
[ முதலீட்டு சந்தை ]
அ) நிறுவனர் மற்றும் பொறுப்பாளர் (Sponsor and Trustee)
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை தொடங்கும் நபர் அல்லது நிறுவனம் நிறுவனர் (Sponsor) என அழைக்கப்படுவார் (SBI, Tata Sons Pvt. Ltd. & Tata Investment Corporation, Nippon Life Insurance Company). இவர்கள் ஒரு அறக்கட்டளையை (Trust) நிறுவுகிறார்கள். இந்த அறக்கட்டளையை கண்காணிக்க பொறுப்பாளர் (Trustee) நியமிக்கப்படுகிறார்கள். முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதையும், சரியான நோக்கத்தில் முதலீடு செய்யப்படுவதையும் உறுதி செய்வது இவர்களின் கடமையாகும்.
ஆ) சொத்து மேலாண்மை நிறுவனம் (AMC - Asset Management Company)
பொறுப்பாளர்களால் நிதியை நிர்வகிக்க நியமிக்கப்படும் கார்ப்பரேட் நிறுவனம். உதாரணமாக, SBI Mutual Fund, HDFC Mutual Fund போன்றவை AMC-கள் ஆகும்.
இ) நிதி மேலாளர் (Fund Manager)
ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு தகுதிவாய்ந்த மேலாளர் நியமிக்கப்படுகிறார். சந்தை நிலவரங்களை ஆராய்ந்து, எந்த பங்குகளை வாங்குவது, எப்போது விற்பது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பது இவர்தான்.
3. மியூச்சுவல் ஃபண்ட் எவ்வாறு செயல்படுகிறது? (Step-by-Step Functioning)
இதன் செயல்பாட்டை 5 முக்கிய படிகளாக பிரித்து புரிந்துகொள்ளலாம்:
படி 1: புதிய நிதி வெளியீடு (NFO - New Fund Offer)
ஒரு புதிய திட்டத்தை தொடங்கும்போது, பொதுமக்களிடமிருந்து பணத்தை திரட்டுவதற்காக புதிய நிதி வெளியிடப்படுகிறது (NFO). ஆரம்ப காலத்தில் ஒரு யூனிட்டின் (Unit) விலை பொதுவாக ₹10 ஆக இருக்கும்.
படி 2: நிதியை திரட்டுதல் (Pooling of Money)
பல்வேறு ஊர்களில் உள்ள சிறு முதலீட்டாளர்கள் முதல் நிறுவனங்கள் வரை தங்களால் இயன்ற தொகையை (குறைந்தது ₹100 அல்லது ₹500) அவர்களுக்கேற்ற திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இதன் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் திரட்டப்படும்.
படி 3: யூனிட்டுகள் ஒதுக்கீடு மற்றும் NAV (Net Asset Value)
முதலீட்டாளர்கள் வழங்கும் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு 'யூனிட்டுகள்' (Units) வழங்கப்படும். ஒரு மியூச்சுவல் ஃபண்டின் தினசரி விலை நிகர சொத்து மதிப்பு (NAV) என்றழைக்கப்படுகிறது.
சூத்திரம்:
NAV (Net Asset Value) நிகர சொத்து மதிப்பு | = | மொத்த சொத்துக்கள் - மொத்த கடன்கள் மொத்த யூனிட்டுகளின் (பங்குகளின்) எண்ணிக்கை |
ஒதுக்கப்படும் யூனிட்டுகள் (Units Alloted) | = | முதலீட்டு தொகை தினசரி NAV மதிப்பு |
படி 4: சந்தையில் முதலீடு செய்தல்
திரட்டப்பட்ட பணத்தை நிதி மேலாளர் தனது குழுவின் உதவியுடன், அந்த நிதியின் நோக்கத்திற்கு பொருத்தமான பங்குகள் அல்லது பத்திரங்களில் முதலீட்டை மேற்க்கொள்வார்.
படி 5: வருவாயை பகிர்ந்தளித்தல்
பங்குகளின் விலை உயரும்போதோ அல்லது அதிலிருந்து டிவிடெண்ட் (Dividend) கிடைக்கும்போதோ, அந்த ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு (NAV) உயரும். முதலீட்டாளர்கள் தங்களின் யூனிட்டுகளை விற்கும்போது இந்த லாபத்தை பெறலாம்.
Mutual Fund தோற்றம், வளர்ச்சி and தொழில்நுட்ப புரட்சி.
4. மியூச்சுவல் ஃபண்டுகளின் வகைகள் (Types of Mutual Funds)
முதலீட்டாளர்களின் தேவைகள், கால அளவு மற்றும் ஆபத்து திறன் (Risk Capacity) ஆகியவை மாறுபடுவதால், பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அ) முதலீட்டு சொத்துக்களின் அடிப்படையில் (Based on Asset Class)
நிதி வகை | முதலீடு செய்யப்படும் இடம் | அபாயம் (Risk) | யாருக்கு ஏற்றது? |
ஈக்விட்டி ஃபண்டுகள் (Equity Funds) | நிறுவனங்களின் பங்குகள் (Stocks) | அதிகம் | நீண்ட கால முதலீட்டாளர்கள் (5+ ஆண்டுகள்) |
டெப்ட் ஃபண்டுகள் (Debt Funds) | அரசு பத்திரங்கள், கார்ப்பரேட் பாண்டுகள் | குறைவு | குறுகிய கால முதலீடு, பாதுகாப்பை விரும்புவோர் |
ஐபிரிட் ஃபண்டுகள் (Hybrid Funds) | பங்குகள் மற்றும் பத்திரங்களின் கலவை | மிதமானது | பங்குகள் மற்றும் பத்திரங்களில் கலந்த முதலீட்டை தேர்ந்தெடுப்பவர்கள் |
ஆ) சந்தை மூலதனத்தின் அடிப்படையில் (Equity Sub-categories)
- பெரு நிறுவனம் (Large Cap): இந்தியாவின் முன்னணி 100 பெரிய நிறுவனங்களில் முதலீட்டை மேற்க்கொள்ளுதல். ஆபத்து குறைவு, நிலையான வளர்ச்சி.
- நடுத்தர நிறுவனம் (Mid Cap): நடுத்தர நிறுவனங்களில் முதலீட்டை செய்தல். அதிக ஆபத்து, அதிக லாபத்திற்கான வாய்ப்பு.
- சிறு நிறுவனம் (Small Cap): சிறிய மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீட்டை செய்தல். அபாயம் மிக அதிகம், ஆனால் நீண்ட காலத்தில் அசாத்திய லாபம் தரக்கூடியது.
இ) செயல்பாட்டு அமைப்பின் அடிப்படையில் (Based on Structure)
- திறக்க முடிந்த தொகை (Open-ended Funds): முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் இதில் சேரலாம், விலகலாம். கால வரம்பு இல்லை.
- திறக்க முடியாத தொகை (Close-ended Funds): NFO கால கட்டத்தில் மட்டுமே மேற்க்கொள்வது. ஒரு குறிப்பிட்ட முதிர்வு காலம் (Maturity Period) இருக்கும் வரை பணத்தை எடுக்க முடியாது.
மற்ற நிதித்துறை சார்ந்த தலைப்புகளின் தொடக்க பகுதிகள்.
📊 Stock Marketஅடிப்படை 🪙 Goldமின்னணு முறை 🛡️ Bondமுக்கிய வகைகள் 💰 Cryptoசந்தை மதிப்பு5. முதலீடு செய்யும் முறைகள்: SIP vs Lumpsum
இரண்டு முதன்மை வழிகள் உள்ளன.
அ. மொத்த முதலீடு (Lumpsum Investment)
ஒரே தவணையாக ஒரு பெரிய தொகையை (உதாரணமாக ₹5,000 அல்லது ₹10,000) மொத்தமாக மேற்க்கொள்வது. சந்தை மிகவும் சரிந்துள்ள நிலையில் இம்முறையை பயன்படுத்துவது லாபகரமாக இருக்கும்.
ஆ. முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டம் (SIP - Systematic Investment Plan)
இதில் முதலீட்டாளர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஒரு சிறிய தொகையை (₹100 முதற்கொண்டு) தொடர்ந்து முதலீடு செய்வது.
SIP-ன் நன்மைகள்:
- ரூபாய் விலை சராசரியாக்கல் (Rupee Cost Averaging): சந்தை உயரும்போது குறைந்த யூனிட்டுகளும் (பங்குகளும்), சந்தை வீழும்போது அதிக யூனிட்டுகளும (பங்குகளும்) வாங்கப்படும். இதனால் சந்தையின் ஏற்ற இறக்க ஆபத்து குறைகிறது.
- தொடர் முதலீடு: மாதந்தோறும் முதலீடு செய்யப்படுவதால் சேமிப்பு பழக்கம் ஊக்கவிக்கப்படுகிறது.
6. கூட்டு வட்டியின் சக்தி (Power of Compounding)
நீண்ட கால முதலீட்டிற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முதன்மை காரணம் கூட்டு வட்டி ஆகும்.
உதாரணமாக, மாதம் ₹5,000 வீதம் 20 ஆண்டுகள் 12% சராசரி வருமானத்தில் SIP செய்கிறீர்கள் எனில்:
- நீங்கள் முதலீடு செய்த மொத்த தொகை: ₹12,00,000
- கூட்டு வட்டியின் மூலம் நீங்கள் பெறும் தோராயமான முதிர்வு தொகை: ₹49,95,740
கால அளவு அதிகரிக்க அதிகரிக்க இந்த வளர்ச்சியின் வேகம் பல மடங்கு அதிகமாகும்.
7. மியூச்சுவல் ஃபண்டில் உள்ள கட்டணங்கள் (Expenses & Loads)
மேலாண்மை செலவுகள், விளம்பரம் மற்றும் நிதி மேலாளரின் சம்பளம் ஆகியவற்றிற்காக கட்டணம் வசூலிக்கின்றன.
- செலவு விகிதம் (Expense Ratio): இது ஒட்டுமொத்த முதலீட்டு மதிப்பில் இருந்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதமாக (பொதுவாக 0.5% முதல் 2.25% வரை) பிடித்தம் செய்யப்படும். Expense Ratio குறைவாக உள்ள ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை தரும்.
- வெளியேறும் கட்டணம் (Exit Load): குறிப்பிட்ட காலத்திற்குள் (உதாரணமாக 1 ஆண்டிற்குள்) எடுத்தால், 1% வரை அபராத கட்டணம் விதிக்கப்படலாம். இது முதலீட்டாளர்களை நீண்ட காலம் முதலீட்டில் வைத்திருக்க ஊக்குவிக்கிறது.
8. மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள்
- நிபுணத்துவ மேலாண்மை (Professional Management): நிதி சந்தையை பற்றி முழுமையாக படித்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் பணத்தை நிர்வகிப்பதால் தவறான முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.
- பல்வகைப்படுத்துதல் (Diversification): ₹500 முதலீடு செய்தாலும், 30 முதல் 50 நிறுவனங்களின் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இதனால் ஒரு நிறுவனம் நட்டமடைந்தாலும், மற்ற நிறுவனங்களின் லாபம் அதனை ஈடுசெய்துவிடும்.
- விகிதாச்சார அளவிலான முதலீடு (Economies of Scale): தனிநபராக பெரு நிறுவனங்களின் பங்குகளை (உதாரணமாக பங்குகளின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கும்போது) வாங்குவது கடினம். ஆனால் கூட்டு நிதியின் மூலம் இது சாத்தியமாகிறது.
- வளைந்து கொடுக்கும் தன்மை (Liquidity): ஓபன்-எண்டட் திட்டங்களில் பணம் தேவைப்படும்போது மிக எளிதாக யூனிட்டுகளை விற்று 1-3 நாட்களுக்குள் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
- வரி சலுகை (Tax Benefits): ELSS (Equity Linked Savings Scheme) இத்திட்டத்தில் வருமான வரி சட்டம் பிரிவு 80C-ன் கீழ் ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
9. இதில் உள்ள ஆபத்துகள் (Risks Involved)
"மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை." - இந்த வாசகத்தை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.
இவை நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை. இதில் உள்ள முக்கிய ஆபத்துகள்:
- சந்தை ஆபத்து (Market Risk): ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சி அல்லது உலகளாவிய பிரச்சனைகளால் பங்கு சந்தை வீழ்ந்தால், மியூச்சுவல் ஃபண்டின் மதிப்பும் குறையும்.
- பணவீக்க ஆபத்து: டெப்ட் ஃபண்டுகளில் கிடைக்கும் வருமானம் சில நேரங்களில் பணவீக்கத்தை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
- மேலாளர் ஆபத்து (Manager Risk): நிதி மேலாளர் எடுக்கும் தவறான கணிப்புகள் அல்லது முடிவுகள் ஃபண்டின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
10. ஒரு சிறந்த மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
சந்தையில் ஆயிரக்கணக்கான திட்டங்கள் உள்ளதால், சரியான ஃபண்டை தேர்ந்தெடுக்க பின்வரும் காரணிகளை ஆராய வேண்டும்:
- முன்னாள் செயல்பாடு (Past Performance): கடந்த 3, 5, மற்றும் 10 ஆண்டுகளில் அந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் (Benchmark) குறியீட்டை விட அதிக வருமானம் தந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். (குறிப்பு: கடந்த கால லாபம் எதிர்காலத்திற்கும் உத்தரவாதமல்ல).
- ரோலிங் ரிட்டர்ன்ஸ் (Rolling Returns): ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஃபண்ட் எவ்வளவு நிலையான வருமானத்தை தந்துள்ளது என்பதை இது காட்டும்.
- நிதி மேலாளரின் அனுபவம்: ஃபண்டை கையாளும் மேலாளரின் தகுதி மற்றும் அவர் இதற்கு முன் நிர்வகித்த ஃபண்டுகளின் சாதனை பதிவுகளை ஆராய வேண்டும்.
- சொத்து அளவு (AUM - Assets Under Management): ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பு மிக குறைவாகவும், மிட் கேப் போன்ற நிதிகளில் மிக அதிகமாகவும் இருக்க கூடாது.
- துறை சார்ந்த ஆபத்துகள் (Sectoral Exposure): ஒரே துறையில் (உதாரணமாக ஐடி அல்லது வங்கி துறை மட்டும்) முதலீடு செய்யப்படாமல், பல துறைகளில் பரவலாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
11. ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு (Regulation & Safety)
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது மிகவும் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான ஒரு அமைப்பாகும்.
- SEBI-யின் கண்காணிப்பு: செபி (SEBI) அமைப்பு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை விதித்துள்ளது. நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் பணத்தை ஏமாற்றுவது கடினம்.
- AMFI (Association of Mutual Funds in India): இந்த அமைப்பு முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகிப்பவர்களையும் முறைப்படுத்துகிறது.
ஒவ்வொரு முதலீட்டாளரின் பணமும் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சொந்த பணத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு, டிரஸ்டிகளின் கண்காணிப்பில் கஸ்டோடியன் (Custodian) வசம் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. எனவே, சந்தை ஆபத்து மட்டுமே உள்ளதே தவிர, ஏமாற்று வேலைகளுக்கான வாய்ப்பு இங்கு மிக மிக குறைவு.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது செல்வந்தர்களுக்கானது மட்டுமல்ல; அது சாமானிய மனிதனும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்று தன் செல்வத்தை பெருக்குவதற்கான ஒரு கருவியாகும்.
நிதி இலக்குகள் (குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வூதிய காலம்) என்ன என்பதை தெளிவாக தீர்மானித்து, அதற்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுத்து, சந்தையின் ஏற்ற இறக்கங்களை கண்டு அஞ்சாமல் நீண்ட காலம் (Long term) முதலீட்டில் நிலைத்திருந்தால், நிச்சயம் நிதி சுதந்திரத்தை (Financial Freedom) அடைய முடியும். முறையான திட்டமிடலும், தொடர்ச்சியான முதலீடும் மட்டுமே நிதி வெற்றிக்கான தாரக மந்திரங்கள் ஆகும்.
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக